ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ மாணவா்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளாா்.
சென்னை வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள வி.ஐ.டி. (VIT) சென்னை வளாகத்தில், “நீதிக்களம் 2026: 2047-க்கான நீதிநெறி – வளர்ந்த பாரதத்திற்கான சட்ட அறிவை தூண்டுதல்” (Jurisprudence For 2047: Igniting Legal Minds for a Developed Bharat) என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் முன்னிலையில் மாணவர்களிடையே உரையாற்றிய அவர், இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி மற்றும் இலக்குகள் குறித்துப் பல்வேறு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்தியாவின் தொன்மையான நாகரிகத்தையும் அதன் தற்போதைய நிலையையும் ஒப்பிட்டுப் பேசினார். உலகம் வியக்கும் மிகப்பழமையான நாகரிகத்தைக் கொண்ட சமூகமாக இந்தியா இருந்தபோதிலும், நமக்கு பின்னால் சுதந்திரம் பெற்ற நாடுகள் கூட நம்மை விட வேகமாக முன்னேறியுள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். “75 ஆண்டுகள் சுதந்திரத்திற்குப் பிறகும் இந்தியா இன்னும் ஒரு வளர்ந்த நாடாக மாறவில்லை என்பது சிந்திக்கத்தக்கது. நம்மிடம் இல்லாத வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட நாடுகள் கூட நிர்வாகத் திறமையால் முன்னேறியுள்ளன. இந்தியாவில் ஐஐடி (IIT) மற்றும் எய்ம்ஸ் (AIIMS) போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் குறித்து நாம் பெருமையாகப் பேசுகிறோம்; அவை தேவையானதுதான், ஆனால் அவை மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு போதுமானவை அல்ல” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியா ஏன் இத்தனை ஆண்டுகளாகப் பின்தங்கியிருந்தது என்பது குறித்துப் பேசிய அவர், அரசியல் கடந்து நிர்வாக ரீதியான குறைபாடுகளைப் பட்டியலிட்டார். “எந்தவொரு பயணமும் வெற்றியை அடைய வேண்டுமானால் முறையான இலக்குகள் (Targets) அவசியம். சுதந்திரம் அடைந்த பிறகு பல தசாப்தங்களாக இந்தியா எந்தவிதமான தெளிவான இலக்குகளையும் நிர்ணயிக்காமல் பயணித்தது. தேர்தல்கள் நடந்தன, ஆனால் தேசத்தின் வளர்ச்சிக்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை. பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகே, இந்தியா சுதந்திரம் அடைந்த 100-வது ஆண்டில் (2047) ஒரு முழுமையான ‘வளர்ந்த நாடாக’ மாற வேண்டும் என்ற இலக்கு முதன்முதலில் நிர்ணயிக்கப்பட்டது” என்று அவர் தெரிவித்தார்.
தற்போது கல்வி பயிலும் மாணவர்களே 2047-ல் இந்தியாவின் தூண்களாக விளங்குவார்கள் என்று குறிப்பிட்ட அமைச்சர், “இன்று மாணவர்களாக இருக்கும் உங்களுக்கு 2047-ல் 40 முதல் 50 வயது இருக்கும். அந்தச் சமயத்தில் இந்தியாவின் வளர்ச்சி உங்கள் கைகளில்தான் இருக்கும். எனவே, உங்கள் இளமைக்காலத்தைச் சரியாகப் பயன்படுத்தி தேச நிர்மாணப் பணிகளில் ஈடுபட வேண்டும்” என அறிவுறுத்தினார்.
மேலும், தென்னிந்தியா மற்றும் தமிழ்நாடு அறிவியல் கண்டுபிடிப்புகளிலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் (GDP) சிறந்து விளங்குவதை அவர் பாராட்டிப் பேசினார். தனது உரையின் இறுதியில் இளைஞர்கள் மத்தியில் காணப்படும் சினிமா மோகம் குறித்து அமைச்சர் ஒரு மென்மையான விமர்சனத்தை முன்வைத்தார். தென்னிந்தியாவில் சினிமா மீதான ஆர்வம் அதிகம் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களுக்குப் பின்னால் தங்களின் பொன்னான நேரத்தைச் செலவிடுவது சரியாகத் தெரியவில்லை. மாணவர்கள் நடிகர்களைப் பின்பற்றுவதை விடுத்து, நாட்டின் வளர்ச்சியை நோக்கித் தங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
பறவைக் காய்ச்சல் எதிரொலி: சென்னை கிண்டி சிறுவர் பூங்கா காலவரையறையின்றி மூடல்!
