சொத்துக் குவிப்பு விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணை
சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக அமைச்சர் ஐ. பெரியசாமி தாக்கல் செய்த மனுவுக்கு, ஜனவரி 5-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-2011 தி.மு.க ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ. பெரியசாமி இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இதில் பெரியசாமியுடன் அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார் (பழனி எம்.எல்.ஏ), பிரபு ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கிலிருந்து இவர்களை விடுவித்து திண்டுக்கல் நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையைத் தொடர ஆணையிட்டது. தற்போது இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் உள்ளது.
இதற்கிடையில், சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக விசாரணையைத் தொடங்கியது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமைச்சர் பெரியசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் மகள் இந்திரா ஆகியோரின் அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனையைத் தொடர்ந்து, அவர்களது சொத்துக்களை முடக்குவது குறித்து விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
அமலாக்கத்துறையின் இந்த நோட்டீசையும், விசாரணை முறையையும் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரியசாமி தரப்பு மனு தாக்கல் செய்தது. தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
“அடிப்படை வழக்கான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே இடைக்காலத் தடை விதித்துள்ளது. எனவே, அதன் அடிப்படையில் எடுக்கப்படும் அமலாக்கத்துறை விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும்.”
இந்த மனு குறித்து விரிவான விளக்கம் அளிக்க கால அவகாசம் கோரியது.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து ஜனவரி 5-ம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
பயணிகள் பாதுகாப்பு…சென்னை 2ம் கட்ட மெட்ரோவில் புதிய வசதி அறிமுகம்!


