சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விலையில் உணவுகள்? உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளின்போது, உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடை செய்யக் கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் தோட்டம் பகுதியை சேர்ந்த ஏ.எஸ்.சண்முகராஜன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த மார்ச் மாதம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான போட்டியை காண சென்றபோது, 40 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய அந்த மைதானத்தில் இலவசமாக சுத்தமான குடிநீர் வசதியோ, கழிப்பறைகளோ அமைக்கப்படவில்லை என்றும், குடிநீர், குளிர் பானங்கள் தின்பண்டங்கள் ஆகியவை அதிக விலைக்கு விற்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

உலக கோப்பை போட்டிகல் நடைபெற இருக்கக் கூடிய நிலையில், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையை விட கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க கோரி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், பிசிசிஐ, சென்னை காவல் ஆணையர், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் ஆகியோரிடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தரப்பில் அனைத்து பகுதிகளிலும் இலவச குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகபட்ச விலையுடன், சேவை வரியை சேர்த்து விற்பதற்கு உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி வாதிடப்பட்டது.
இதையடுத்து, அதிக விலைக்கு விற்கப்படுவதாக கூறும் மனுதாரர் அதற்கான ஆதாரங்களை வழக்குடன் இணைக்கவில்லை என்பதால், நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி சண்முகராஜனின் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர். அதேசமயம், கூடுதல் விலைக்கு விற்கபடுவது தொடர்பான குற்றச்சாட்டை, சம்பந்தப்பட்ட உரிய அமைப்பிடம் முன்வைக்கலாம் எனவும் அனுமதி அளித்துள்ளனர்.