கோயம்பேடு காய்கறி சந்தை வளாகத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும், என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு காய்கறி சந்தை வளாகம் வெளிநாடுகளில் உள்ள காய்கறி சந்தைகள் போன்று தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்தார்.


சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் சி.எம்.டி.ஏ. சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் காய்கறி சந்தையில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு வியாபாரிகளிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
அப்போது அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து போது,
சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி மலர்கள் அங்காடியில் ஆய்வு மேற்கொண்டு வியாபரிகள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினோம். அதனை தொடர்ந்து, இன்று காய்கறி சந்தையில் உள்ள 1985 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

மார்க்கெட்டில் உள்ள குப்பைகள் அகற்ற காலதாமதம் ஏற்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு நாளில் காலை மாலை என இரு முறை குப்பைகளை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு அமைச்சர் சேகர்பாபு திருவிழா காலங்களில் அதிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குப்பைகள் அகற்ற படும் எனவும், கோரிக்கைக்கு ஏற்ப ஒரு நாளில் இரு முறை குப்பைகள் எடுக்கப்படும் எனவும், சர்வீஸ் சாலைகள் அசுத்தமாகவும் பயன்படுத்த முடியாமலும் இருப்பதால் பயன்பாட்டிற்கேற்ப சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கோயம்பேடு காய்கறி சந்தையில் சேதமடைந்த இடங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்தமுள்ள 3941 கடைகள் வெளிநாடுகளில் உள்ள மார்கெட்டுகள் போல் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்தடுத்து பழங்கள் அங்காடி, உணவு தானிய அங்காடி, பேருந்து நிறுத்தம் போன்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டு கோயம்பேடு காய்கறி மார்கெட் பகுதி பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கபப்டும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

மேலும், கோயம்பேடு வளாகத்தில் 8 ஏக்கர் அளவில் பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். கோயம்பேடு சந்தையில் சேகரிக்கப்படும் காய்கறி கழிவுகளை சென்னை மாநகராட்சி சார்பில் சேத்துப்பட்டில் உள்ள பயோ கேஸ் ஆலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும் கோயம்பேடு சந்தையில் பயோ கேஸ் ஆலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கோயம்பேடு காய்கறி சந்தை பகுதியில் கழிவறைகள் ஒரு வார காலத்திற்குள் முழுமையாக சுத்தம் செய்யப்படும் என்றும் கூறினார்.
மேலும், போக்குவரத்து நெரிசல் பிரச்சனை சரி செய்யப்படும், விழா காலங்களில் கூடுதலாக காவலர்கள் நியமிக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


