வில்லிவாக்கம் சிட்கோ நகர் முழுவதும் நீரால் சூழ்ந்து காணப்படுகிறது. பொது மக்களுக்கு உணவு உடை இருப்பிடம் இழந்து தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மூன்று நாட்களாகியும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

தற்போது அப்பகுதியில் 8ஆவது மண்டல குழு தலைவர், 94ஆவது வார்டு உறுப்பினர் உ.பி.ஜெயின் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் பால், போர்வை, பிஸ்கட் போன்றவை வழங்கி வருகிறார். மேலும் பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக உடனடியாக நீரை வெளியேற்ற வேண்டும் எனவும், மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பெரும் அவதிப்பட்டு வருவதாகவும், அரசு தரப்பில் நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப உதவிடுமாறு கேட்டு கொண்டனர்.
இது சம்மந்தமாக பேட்டி அளித்த கபாலி கூறுகையில், “தற்போது பெய்த மழையால் கீழ் உள்ள வீடுகள் மூழ்கி பொருட்கள் சேதமடைந்தது உள்ளது புயல் ஆரம்பித்து இரண்டு நாட்களாக உணவு மின்சாரம் இல்லாமல் பெரும் அவதிப்பட்டோம், தற்போது நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர். எங்களுடைய கோரிக்கை சூழ்ந்து உள்ள நீரை வெளியேற்ற வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும் சரஸ்வதி என்பவர் கூறுகையில், “உள்ளே வந்து பாருங்கள் குழந்தைகள் குடும்பம் என அனைவரும் நீர் சூழ்ந்து பெரும் அவதி படுகிறோம், தயவுசெய்து நீரை வெளியேற்றினால் போதும்” என தெரிவித்தார்.
ரமணி என்பவர் கூறும்போது, “அம்பத்தூர் பகுதியில் இருந்து இங்கு வந்து பணிபுரிகிறேன், நீர் சூழ்ந்து உள்ளதால் திரும்பி செல்கிறேன், கூலி தொழில் செய்பவர்கள் நிலைமை பற்றி சிந்தியுங்கள் தயவு செய்து அரசு நீரை வெளியேற்றி மக்களுக்கு உதவிடுமாறு கேட்டு கொண்டார்.”