சென்னையில் மதுபோதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திவிட்டு, காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சவுகார்பேட்டை பெருமாள் கோயில் பகுதியில் வசித்து வருபவர் தரணிதரன். இவர் பாரதிய ஜனதா கட்சியின் துறைமுகம் தொகுதி வடக்கு மண்டல செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் தரணிதரன் இன்று சென்னை பீச் ஸ்டேஷனிலிருந்து தீவுத்திடல் செல்லும் வழியான முத்துசாமி பாலத்தில்
மதுபோதையில் அதிவேகமாக காரை ஒட்டிச் சென்று, சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் விபத்து ஏற்பட்ட வாகனத்தை மீட்டு சாலையோரமாக நிறுத்திவைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய தரணிதரனிடம் போக்குவரத்து காவல்துறை ஆவணங்களை கேட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, போக்குவரத்து போலீஸாரிடம் தரணிதரன் நான் பாஜக துறைமுக தொகுதி மண்டல செயலாளராக உள்ளதாகவும், தான் பாஜகவை சேர்ந்தவன் என்பதனால் மீடியாக்களை அழைத்து அசிங்கப் படுத்துகிறீர்களா என மதுபோதையில் போக்குவரத்து காவல்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அண்ணாமலை ஜி என்னை காப்பாற்றுங்கள், நான் பிஜேபியை சேர்ந்தவன் என்பதால் காவல்துறை இப்படி நடந்து கொண்டிருக்கின்றது என தெரிவித்தார். மேலும் துறைமுகம் தொகுதி கிழக்கு மாவட்டம் தலைவர் விஜய் ஆனந்த், தனக்கு நெருங்கிய நண்பர் என்றும், அண்ணாமலையின் பர்சனல் பி.ஏ. ஆக விஜய்ஆனந்த் உள்ளதாக கூறி தரணிதரன் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரை மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது