வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வெங்காயத்தை உரிக்காமலேயே விலையை கேட்டதும் கண்களில் தண்ணீர் வருகிறது.
பல்வேறு மாநிலங்களில் பெய்த தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால், வெங்காய விளைச்சல் கடந்த சில மாதங்களாக குறைந்துள்ளதால் கோயம்பேடு மொத்த காய்கறி மார்க்கெட் சந்தைக்கு வெங்காயத்தின் வரத்து குறைவால் விற்பனை விலை அதிகரித்துள்ளது.
சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா கர்நாடகாவில் இருந்து வரக்கூடிய வெங்காயத்தின் வரத்து குறைவால் வெங்காயத்தின் விலை அதிகமாக உள்ளது.
கோயம்பேடு மார்கெட்-ல் வெங்காய விலை இன்று ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக சில்லறை விற்பனை கடைகளில் ரூ.100 முதல் ரூ.120 வரை வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.
முதல் ரக வெங்காயம் நாசிக் , இரண்டாம் ரகம் சோலாப்பூர், மூன்றாவது ரகம், பெங்களூரூ நான்காவது ரகம் ஆந்திராவிலிருந்து வருகிறது.
நாசிக் வெங்காயத்தின் தரம் நன்றாக இருக்கும். ஒரு மாதத்தில் இருந்து ஆறு மாதம் வரை தாங்கும் தன்மை உடையது. பெங்களூரு வெங்காயம் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை மட்டுமே தாங்கும். ரகத்திற்கு ஏற்றார் போல் கோயம்பேடு மொத்த காய்கறி விற்பனையில் வெங்காயத்தின் விலை விற்பனை செய்யப்படுகிறது.
பொதுவாக நவம்பர் டிசம்பர் மாதங்களில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயரும். அதேபோல இந்த ஆண்டும் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் அதிகபட்சமாக ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 60 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று மொத்த விற்பனையில் 90 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 60 முதல் 65 வெங்காயம் லாரிகள் கோயம்பேடு சந்தைக்கு வருகின்றனர். இன்று 20 முதல் 23 லாரிகள் மட்டுமே வந்துள்ளது.
சென்னை புறநகரில் ஒரு நாளைக்கு 1300 டன் வெங்காயம் தேவைப்படுகிறது. ஆனால் வெங்காயத்தின் வரத்து 400 முதல் 450 டன் ஆக குறைந்துள்ளது.
அதிலும் 300 டன் மட்டும் முதல் தரம் வெங்காயம் ஆகும். இதனால் வெங்காயத்தின் விலையேற்றம் அதிகரித்துள்ளது.
அதே போன்று கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு இன்று மகாராஷ்டிராவில் இருந்து 100 லாரிகள் வரவேண்டியதில் 18 லாரிகள் மட்டுமே வந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து 12 லாரிகள் வெங்காயம் கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு வந்துள்ளது.
இன்னும் ஒரு மாத காலத்திற்கு வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும் என்று வியாபாரிகள் கூறகின்றனர்.