Homeசெய்திகள்சென்னைஒரு மணி நேரம் வரிசையில் காத்திருந்து, கூட்டுறவுத்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள வெற்றி காய்கறி தொகுப்பை பெற்றதாக...

ஒரு மணி நேரம் வரிசையில் காத்திருந்து, கூட்டுறவுத்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள வெற்றி காய்கறி தொகுப்பை பெற்றதாக 78 வயது முதியவர் ஆதங்கம்!

-

- Advertisement -

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு விற்பனையில், முதல் நாளிலேயே பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

we-r-hiring

சென்னை அண்ணா நகர் பகுதியில் வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு விற்பனையை கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் தொடங்கி வைத்தார். அப்போது சுமார் 10 பயனாளிகளுக்கு தனது கையால் காய்கறித் தொகுப்புகளை வழங்கினார்.

தமிழகம் முழுவதும் இன்று முதல் சனிக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு 218 கூட்டுறவு அங்காடிகளில் இந்தத் தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 4 நடமாடும் வாகனங்கள் மூலமாகவும் விற்பனை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடமாடும் வாகனங்களையும் அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அரை மணி நேரத்தில் காலியான காய்கறித் தொகுப்புகள்!

அமைச்சர் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு காய்கறித் தொகுப்புகளை வழங்கிவிட்டுச் சென்ற அரை மணி நேரத்திற்குள்ளாகவே, விற்பனைக்காக முன்கூட்டியே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த தொகுப்புகள் அனைத்தும் காலியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, புதிதாகத் தொகுப்புகளைத் தயார் செய்து வழங்குவதாகக் கூறி விற்பனையாளர்கள் பொதுமக்களைக் காத்திருக்க வைத்ததாகப் புகார்கள் எழுந்தன.

முதல் நாளிலேயே பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் காய்கறித் தொகுப்புகளைத் தயார் செய்து வைக்காததால் இந்த நிலை ஏற்பட்டதாக வாடிக்கையாளர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

ஒரு மணி நேரம் காத்திருந்த 78 வயது முதியவர்!

காய்கறித் தொகுப்பைப் பெற்றுக்கொண்ட 78 வயதான பலராமன் என்ற முதியவர், சுமார் ஒரு மணி நேரம் வரிசையில் காத்திருந்த பிறகே தொகுப்பைப் பெற முடிந்ததாகத் தெரிவித்தார்.

மேலும், சிலர் வரிசையில் காத்திருக்காமல் இடையிடையே வந்து ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கறித் தொகுப்புகளை வாங்கிச் செல்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

சில நபர்களிடம் கூடுதல் பணம் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுப்புகளை ஊழியர்கள் வழங்குவதாகவும் பலராமன் புகார் தெரிவித்தார்.

பொதுமக்கள் அனைவருக்கும் முறையாகத் தொகுப்புகள் கிடைக்கும் வகையில் விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மூன்று நாட்களுக்கு மட்டுமே நடைபெற உள்ள வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே இத்தகைய புகார்கள் எழுந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காய்கறித் தொகுப்புகளின் இருப்பை அதிகரித்து, அனைவருக்கும் முறையாகக் கிடைக்கச் செய்ய கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மாமனாரின் நினைவாக ரூ.1.5 கோடியில் கோவில் கட்டிய மருமகன் – நெகிழ்ச்சியில் ஆழ்த்திய பாசம்!

MUST READ