சென்னையில் பள்ளி, கல்லூரி வளாகங்களுக்கு அருகே 100 மீட்டருக்கு உள்ளாக பீடி சிகரெட்டுகளை விற்பனை செய்ய மாட்டோம் வணிகர்கள் சங்கம், சென்னை காவல்துறையிடம் வாக்குறுதி அளித்துள்ளது.

சென்னையில் பான் மசாலா, குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடை செய்வதற்கு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே பீடி, சிகரெட் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும், பல்வேறு கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் சென்னை காவல்துறை, கல்வி நிறுவனங்களுக்கு அருகே செயல்படும் கடைகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். விதிகளை மீறி பீடி, சிகரெட் விற்பனை செய்தவர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இது தொடர்பாக மனு ஒன்றை அளித்தார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் பேசியதாவது:- அரசு தடை செய்த பொருட்களை வணிகர்கள் விற்பனை செய்யக்கூடாது என்பதில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தெளிவாக உள்ளது. சென்னையில் பல்வேறு கடைகளில் காவல்துறையினர் பீடி, சிகரெட் விற்பனை தொடர்பாக நேரடியாக சோதனை மேற்கொள்கின்றனர். இந்த நடவடிக்கையில் வணிகர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அன்றாடம் கடன் வாங்கி வாழ்வாதாரத்தை நடத்தும் வணிகர்கள், சிகரெட், பீடிகளை காவல்துறை அள்ளிச் செல்லும்பொழுது அந்த பணம் கொடுக்க முடியாத நிலையில் வியாபாரிகள் தள்ளப்படுகிறார்கள். பீடி, சிகரெட் விற்காத கடை உரிமையாளர்கள் மீது தேவையில்லாமல் பொய் வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது என்பதற்காக சென்னை காவல்துறை ஆணையர் அருணை சந்தித்து மனு அளித்துள்ளோம். விற்பனை செய்யாத வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம். வழக்குகள் பதிவு செய்யப் படாது என காவல் ஆணையர் உறுதியளித்துள்ளார். சென்னை காவல் துறையே பள்ளி, கல்லூரி இருக்கும் பகுதிகளில் 100 மீட்டர் தூரத்தை அளந்து மார்க் செய்ய உள்ளதாகவும், அதன் உள்ளாக விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். 100 மீட்டர் தாண்டி தாங்கள் விற்பனை செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளோம். வணிகர்கள் அரசு தடை செய்த பொருட்களை வியாபாரிகளை விற்பனை செய்யாதீர்கள். கல்லூரி- பள்ளி அருகே கடை வைத்திருக்கும் வியாபாரிகள் பீடி, சிகரட்டை அப்புறப்படுத்த வேண்டும். 100 மீட்டர் தாண்டி விற்பனை செய்வேன் என உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும். சோதனை என்ற பெயரில் காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கை சில நேரங்களில் வணிகர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இது குறித்து சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்