சென்னையில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த ஊழியர் மீது மரம் விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் குறிஞ்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ்(54). இவர் சென்னை தேனாம்பேட்டை திருவள்ளூர் தெருவில் தனது மனைவி செல்வி(44) உடன் தங்கி கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஒரு பங்களா வீட்டில் தோட்ட வேலை செய்து வந்தார்.

நேற்று காலை துரைராஜ் வழக்கம் போல் கிரீன்வேஸ் சாலையில் உள்ள கிருஷ்ண மூர்த்தி பவுன்டேசன் பங்களாவுக்கு சென்று தோட்ட வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது காய்ந்த நிலையில் இருந்த பெரிய ஆலமரம் ஒன்று துரைராஜ் தலை மீது சாய்ந்து விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு சென்ற அபிராமபுரம் போலீசார் துரைராஜ் சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் துரைராஜின் மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பங்களா மேற்பார்வையாளர் ராமசந்திரன் (54) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


