கமல் பட நடிகைகள் சூர்யா 46 படத்தில் இணைவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.சூர்யா நடிப்பில் சமீபத்தில் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. அதே சமயம் சூர்யா, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படமானது இந்த ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் இன்று (மே 19) சூர்யா 46 படத்தின் பூஜை நடந்து முடிந்துள்ளது. அதாவது தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி என்ற வெற்றி படத்தை கொடுத்து, அதன் பிறகு துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படத்தை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த வெங்கி அட்லுரி தான் சூர்யாவின் 46வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.
நடிகை மமிதா பைஜூ இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கும் எனவும், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படம் திரைக்கு வரும் எனவும் சொல்லப்படுகிறது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் நடிகை ராதிகா மற்றும் நடிகை ரவீனா டாண்டன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனராம். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.
நடிகை ராதிகா, கமல்ஹாசன் உடன் இணைந்து சிப்பிக்குள் முத்து போன்ற படங்களில் நடித்திருக்கிறார். நடிகை ரவீனா டாண்டன், கமலுடன் இணைந்து ஆளவந்தான் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.