’96’ பட ஜோடி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பிரேம்குமார் இயக்கத்தில் 96 எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் ராம், ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷன் ஆகியோர் சிறு வயது ராம், ஜானுவாக நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று இன்று வரையிலும் ரசிகர்களின் ஃபேவரைட் படமாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து ’96 பாகம் 2′ உருவாகப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் நடித்திருந்த ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷன் ஆகிய இருவரும் இணைந்து ‘ஹாட் ஸ்பாட்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தனர். அடுத்தது மீண்டும் ஒரு புதிய படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கப் போவதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி ஆரிஜின் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் ஆதித்யா பாஸ்கர் கதாநாயகனாகவும் கௌரி கிஷன் கதாநாயகியாகவும் நடிக்க உள்ளார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த படத்தை ராஜ்குமார் ரங்கசாமி இயக்க இருக்கிறார் என்றும் எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் என்றும் எல். ராமச்சந்திரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யப் போகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.