ராகவா லாரன்ஸின் பென்ஸ் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும், நடன இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது காஞ்சனா 4 திரைப்படத்தை தானே இயக்கி, நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது பிரேக் விடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ராகவா லாரன்ஸ், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் பென்ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். அதன்படி இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கப் போவதாகவும், இந்த படமானது லோகேஷ் கனகராஜின் எல்சியுவில் இணைவதாகவும் அறிவிக்கப்பட்டது. அடுத்தது இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்கிறார் என சொல்லப்பட்டது. இது தவிர இந்த படத்தில் பிரியங்கா மோகனை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், பென்ஸ் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருக்கிறதாம். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் லேட்டஸ்ட் தகவல் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே நடிகர் மாதவன் இப்படத்தில் நடிக்கிறார் என பல தகவல்கள் வெளிவந்த நிலையில் மாதவன் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் நிவின் பாலி படத்தில் நடிக்க உள்ள தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.