ருக்மினி வசந்த், பிரபல தெலுங்கு நடிகருக்கு ஜோடியானதாக தயாரிப்பாளர் அப்டேட் கொடுத்திருக்கிறார்.
நடிகை ருக்மினி வசந்த், கன்னடத்தில் வெளியான ‘சப்த சாகரடாச்ச எல்லோ’ என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதைத் தொடர்ந்து இவர், ஏகப்பட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது யாஷுடன் இணைந்து ‘டாக்ஸிக்’, ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து ‘காந்தாரா சாப்டர் 1’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது தவிர தமிழில் அறிமுகமான இவர், விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது சிவகார்த்திகேயனுடன் இணைந்து இவர் நடித்திருக்கும் ‘மதராஸி’ திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இது தவிர மணிரத்னம் இயக்கத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகி இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இவ்வாறு தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக மாறியுள்ள ருக்மினி வசந்துக்கு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இவர், பிரபல தெலுங்கு நடிகருடன் கைகோர்த்துள்ளதாக தயாரிப்பாளர் என்.வி. பிரசாத் கூறியுள்ளார். அதாவது ஏற்கனவே வெளியான தகவலின் படி, பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தில் ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடிக்கிறார் என தெரிவித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியின் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.