பிரபல தமிழ் நடிகரின் மகள், ஜூனியர் என்டிஆர்-ன் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். இவர் தற்போது கே.ஜி.எஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். ஜூனியர் என்டிஆர் 31வது படமான இந்த படத்திற்கு தற்காலிகமாக NTR 31 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும், நந்தமுரி தரகா ராமாராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. அதே சமயம் ரவி பஸ்ரூர் இந்த படத்திற்கு இசையமைக்க புவன் கௌடா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்வதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. அதாவது ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி ஏற்கனவே படப்பிடிப்புகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் இந்த படத்திற்கு டிராகன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் சமீப காலமாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அடுத்தது இப்படத்தின் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் கமல்ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு நடனமாட உள்ளாராம். பொதுவாகவே பிரசாந்த் நீல் தன்னுடைய படங்களில் ஐட்டம் பாடல்களை வைப்பதில்லை.
ஆனால் ஜூனியர் என்டிஆரின் புதிய படத்தில் ஸ்ருதிஹாசன் நடனமாடும் பாடல் முக்கியமானதாக இருக்கும் என்றும், அது ஜூனியர் என்டிஆரின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்த உதவும் என்பதாலும் இந்த பாடலை படத்தில் வைக்க இயக்குனர் பிரசாந்த் நீல் திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஸ்ருதிஹாசன், ஜூனியர் என்டிஆருடன் இணைந்து ராமய்யா வஸ்தாவையா போன்ற படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.