நடிகர் மகேஷ் பாபுவின் புதிய படத்தில் பிரபல தமிழ் பட இயக்குனர் ஒருவர் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது நடிப்பில் கடைசியாக குண்டூர்காரம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர், பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படம் மகேஷ் பாபுவின் 29 ஆவது படமாக உருவாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு SSMB29 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் இணைந்து பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிரபல தமிழ் பட இயக்குனர் ஒருவரும் இந்த படத்தில் நடிக்க உள்ளார் என சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரவி வருகின்றன. அதன்படி அந்த இயக்குனர், கௌதம் வாசுதேவ் மேனன் , எஸ். ஜே. சூர்யா, சமுத்திரக்கனி ஆகிய மூவரில் யாரேனும் ஒருவராக இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். இருப்பினும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. மேலும் இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் எனவும் முதல் பாகம் 2027- லிலும் இரண்டாம் பாகம் 2029- இலும் திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.