‘சூர்யா 47’ படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா , கருப்பு, சூர்யா 46 ஆகிய படங்களுக்கு பிறகு ‘ஆவேஷம்’ படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47வது திரைப்படத்தில் நடிக்கப்போகிறார் என ஏற்கனவே தகவல் வெளியாகி வந்தது. அதன்படி தற்காலிகமாக சூர்யா 47 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யா புதிதாக தொடங்க இருக்கும் ‘ழகரம்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க இருப்பதாகவும், இப்படத்திற்கு சுசின் ஷியாம் இசையமைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே நடிகர் சூர்யா, காக்க காக்க, சிங்கம்- 1,2, 3 ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த நிலையில், மீண்டும் இவர் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ள தகவல் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படமானது மாஸ் கமர்சியல் என்டர்டெய்னர் படமாக உருவாக இருக்கிறதாம். இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்கிடையில் இப்படம் தொடர்பான பல அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.
ஏற்கனவே பிரபல நடிகையும், பகத் பாசிலின் மனைவியுமான நஸ்ரியா இப்படத்தின் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல் வெளியாகி வரும் நிலையில், பகத் பாசிலும் இந்த படத்தில் இணைய இருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

மலையாள சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வலம் வரும் பகத் பாசில், தமிழில் வேலைக்காரன், மாமன்னன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து மிரட்டியுள்ளார். எனவே சூர்யா 47 படத்திலும் அவருடைய கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரமாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் இந்த தகவல் உறுதியாகும் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.