தலைவர் 173 படத்தில் முன்னணி நடிகை இணைய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
‘ஜெயிலர் 2’ படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 173-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தலைவர் 173 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க இருக்கிறார். அனிருத் இதற்கு இசையமைக்கப்போவதாக சொல்லப்படுகிறது. மேலும் சுந்தர்.சி இந்த படத்தில் இருந்து விலகிய பின்னர், ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் ‘தலைவர் 173’ படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சமீபகாலமாக செய்திகள் வெளியாகி வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற டிசம்பர் 12 ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி விடுகின்றன.
அதன்படி இந்த படம் கல்லூரி பின்னணியில் எடுக்கப்பட இருக்கிறது என்றும், இது ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்புவிற்கு சொன்ன கதை இல்லை என்றும் சொல்லப்படுகிறது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகர் கதிர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும், இது தொடர்பான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இனிவரும் நாட்களில் ஷூட்டிங் தொடர்பான அப்டேட்டுகளும் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.


