டாப் தமிழ் நடிகர் ஒருவர், நடிகர் சிரஞ்சீவியுடன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவி தற்போது ‘மன சங்கர வர பிரசாத் கரு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து சிரஞ்சீவி தனது 158வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி தற்காலிகமாக ‘மெகா 158’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் பாபி கொல்லி இயக்க இருக்கிறார். ‘வால்டர் வீரய்யா’ படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைய இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த படமானது கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட இருப்பதாகவும் தமன் இந்த படத்தில் இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் பிரபல தமிழ் நடிகர் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
இதற்காக கார்த்திக்கு ரூ.23 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
நடிகர் கார்த்தி தற்போது சர்தார் 2, மார்ஷல் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதே சமயம் வருகின்ற டிசம்பர் மாதம் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் வா வாத்தியார் திரைப்படம் உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


