தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமைகளை கொண்டிருக்கிறார். அந்த வகையில் ஒரு பக்கம் நடிப்பில் பிசியாக ஓடிக் கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் தயாரிப்பு, இயக்கம் என படு பிஸியாக இருக்கிறார். இவ்வாறு ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் தனுஷ் நடிப்பில் தற்போது குபேரா திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் வருகின்ற 20ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர இட்லி கடை திரைப்படம் 2025 அக்டோபர் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் இவர் தேரே இஷ்க் மெய்ன், D55, D56, இளையராஜாவின் பயோபிக் படம் ஆகிய ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் இன்னும் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார் தனுஷ். இந்நிலையில் தனுஷின் புதிய படம் குறித்து எதிர்பாராத அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது நடிகர் தனுஷ், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான APJ அப்துல் கலாமின் பயோபிக் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆதிபுருஷ் படத்தை இயக்கிய ஓம் ராவத் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் அபிஷேக் அகர்வால், அனில் சுங்காரா, பூசன் குமார், கிருஷன் குமார் ஆகியோர் இணைந்து தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த படத்திற்கு கலாம்: தி மிஸைல் மேன் ஆஃப் இந்தியா என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படமானது அப்துல் கலாம் எழுதிய அக்னி சிறகுகள் புத்தகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட இருப்பதாகவும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. யாரும் எதிர்பாராமல் வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்திருப்பதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகபடுத்தி உள்ளது.