ஆர்யன் படத்தின் திரைவிமர்சனம்.
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆர்யன் திரைப்படம் இன்று (அக்டோபர் 31) உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா செளத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்க விஷ்ணு விஷால் இப்படத்தை தயாரித்திருக்கிறார். பிரவீன் கே இதனை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். அப்போது அவர் பிரபல நடிகர் ஒருவரை பேட்டி எடுக்கிறார். அந்த சமயத்தில் பார்வையாளர்களில் ஒருவராக இருக்கும் செல்வராகவன், பேட்டி நேரலையின் போது அந்த நடிகரை அடித்து விட்டு பேசத் தொடங்குகிறார். அதாவது இனி வரும் 5 நாட்களில் 5 கொலைகள் அடுத்தடுத்து நடக்க இருக்கிறது என்று சொல்லிவிட்டு துப்பாக்கியால் தன்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துவிடுகிறார். அதன் பிறகு செல்வராகவன் யார்? கொலைகள் ஏன் நடக்கிறது? என்பதை விஷ்ணு விஷால் இன்வெஸ்டிகேஷன் செய்வதுதான் இந்த படத்தின் மீதிக்கதை.
இதில் விஷ்ணு விஷால் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி தன்னுடைய கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார். போலீஸ் கெட்டப் அவருக்கு கச்சிதமாக பொருந்தினாலும் ராட்சசன் பட லுக் இதில் இல்லாதது ஏதோ மிஸ் ஆவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இருப்பினும் ஆக்ஷன் காட்சிகளிலும் மிரட்டி இருக்கிறார் விஷ்ணு விஷால். கதாநாயகியாக நடித்துள்ள ஷ்ரத்தாவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் செல்வராகவனின் நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜிப்ரானின் இசையும், ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவும் படத்தின் பிளஸ் பாயிண்ட் என்று சொல்லலாம்.
அடுத்தது இந்த படம் வழக்கமான திரில்லர் கதையில் உருவாகியிருந்தாலும் வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் அமைந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. இருப்பினும் படம் மெதுவாக நகர்வது படத்திற்கு மைனஸ் ஆக அமைந்துள்ளது. இது தவிர சில லாஜிக் மிஸ்டேக்குகளும் படத்தில் உள்ளது. எனவே அதனை தவிர்த்து இருந்தால் படம் இன்னும் பெரிய அளவில், அதாவது ராட்சசன் பட அளவில் பேசப்பட்டிருக்கும்.


