நடிகர் அஜ்மல் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான பிப்ரவரி 14 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதைத் தொடர்ந்து இவர் அஞ்சாதே படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். பின்னர் கோ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதற்கிடையில் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர் அடுத்ததாக விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கோட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜயின் 68வது படமாக உருவாகி வரும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தில் விஜய் தவிர அஜ்மல், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் விஜயின் நண்பர்களாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு திருவனந்தபுரம் ரஷ்யா சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜ்மல், தி கோட் படத்தில் தனது பகுதிகளை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே சமயம் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.