நடிகர் சார்லி இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
சார்லி கடந்த 1983 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பொய்க்கால் குதிரை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகராகவும் துணை நடிகராகவும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருடைய இயற்பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர். சார்லி சாப்ளின் விளைவாக இவருக்கு சார்லி என்ற பெயர் வந்தது. இவர் கமல், ரஜினி, விஜயகாந்த், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இன்று வரையிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இன்றைய தலைமுறையினருக்கும் தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து வருகிறார். கடந்தாண்டில் வெளியான எறும்பு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் சார்லி. அதைத்தொடர்ந்து இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக தனது திறமையை வெளிக்காட்டிய இவர் தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை ரசிக்க வைத்து திரைத் துறையில் இந்த அளவு உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார். அதேசமயம் இவர் நகைச்சுவை காட்சிகளில் மட்டுமல்லாமல் எமோஷனல் காட்சிகளிலும் பட்டைய கிளப்பி விடுவார். எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை தயங்காமல் ஏற்று நடித்து அந்தக் கதாபாத்திரமாகவே மாறி பார்வையாளர்களை கண்கலங்க செய்து விடுவார். விஜய், சூர்யா கூட்டணியில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படத்தில் இவருடைய கோபாலு என்ற கதாபாத்திரம் இன்றுவரையிலும் பேசப்படுகிறது. வடிவேலுவும், சார்லியும் இணைந்து செய்யும் ரகளை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.மேலும் நடிகர் சார்லி சத்தமே இல்லாமல் பல ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக உதவி வருகிறார். இவ்வாறு நல்ல நடிகராகவும் நல்ல மனிதராகவும் பயணித்து வரும் நடிகர் சார்லிக்கு நாமும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்வோம்.