நடிகர் தனுஷின் பிறந்தநாள் இன்று.
தனது அண்ணனால் கத்துக்குட்டியாக சினிமாவில் நுழைந்தவர் தனுஷ். இன்று இவர் அந்த அண்ணனை இயக்கும் அளவிற்கு அசுரத்தனமான வளர்ச்சி அடைந்திருக்கிறார். இவர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது தனது 50வது திரைப்படத்தை தானே இயக்கி நடித்து சினிமாவின் மீதான தன்னுடைய காதலை வலுவாக்கிக் கொண்டார். அதன்படி பன்முகத் திறமை கொண்ட தனுஷ், பாடகராக, பாடல் ஆசிரியராக, தயாரிப்பாளராக தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் உருவ கேலியால் விமர்சிக்கப்பட்ட இவர் பல விருதுகளை வென்று தன் திறமையினால் பதிலடி கொடுத்தார். அதன்படி இவருடைய அண்ணனும் ஆசானுமான செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் இவருடைய நடிப்புத் திறமையை தமிழ் ரசிகர்களாகிய நாம் பார்த்திருக்கிறோம். அதைத்தொடர்ந்து பல கமர்சியல் வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் இயக்குனர் வெற்றிமாறனுடன் கைகோர்த்து ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். தமிழ் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என எல்லை தாண்டி இவருடைய சாதனைப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மேலும் இவர் டாப் நடிகராக இருந்தாலும் ராயன் படத்தை தொடர்ந்து சில படங்களை இயக்கி தான் சிறந்த இயக்குனர் என்பதையும் நிரூபித்து வருகிறார். இத்தகைய பெருமையுடைய தனுஷ் இன்று (ஜூலை 28) தனது 41வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நாமும் அவர் மேன்மேலும் சாதனை படைத்திட மனதார வாழ்த்தி மகிழ்வோம்.