நடிகர் மோகன்லால், லப்பர் பந்து படத்தை பாராட்டியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் லப்பர் பந்து எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து அட்டகத்தி தினேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா, பால சரவணன், கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்தனர். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் 2024 ஆம் ஆண்டின் சிறந்த படங்களில் லப்பர் பந்து திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால், லப்பர் பந்து படத்தினை பாராட்டியுள்ளார்.
அதன்படி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் மோகன்லாலிடம், மலையாள சினிமாவில் அழுத்தமான கதைக்களம் கொண்ட படங்கள் வெளியாவதைப் போல் தமிழ் சினிமாவில் வெளியாவதில்லை என்பது போன்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மோகன்லால், “தமிழில் அருமையான படங்களும் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் அருமையாக இருந்தது. அந்த படம் சின்ன சின்ன விஷயங்களை வைத்து அருமையாக படமாக்கப்பட்டு இருந்தது” என்று பதிலளித்துள்ளார்.

மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் பரோஸ் திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து இவர், எம்புரான் போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


