தமிழ் சினிமாவில் தளபதியாக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி இருக்கிறார். அதன்படி தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தான் தொடங்கி இருப்பதாகவும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அறிவித்துள்ளார். அதே சமயம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய்க்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பட பிரபலங்கள் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பார்த்திபன் தனது யூட்யூப் சேனலில் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது குறித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் நடிகர் பார்த்திபன், ” அரசியல் களத்தில் புதிதாக புரட்சி குரல் கொடுத்துள்ள நண்பர் விஜய்க்கு வாழ்த்து கூறும் செய்தி இது. நண்பர் விஜய் அவர்களின் பின்புறம் உள்ள அர்ப்பணிப்பு ஆச்சரியத்திற்குரியது. 100 கோடி சன்மானம் பெரும் விஜய், 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்திய அரசியலில் தமிழக அரசியல் என்பது நாளைய இந்தியாவை வெல்வதாக இருக்க வேண்டும். இந்நிலையில் விஜய் தனது வருமானத்தை தியாகம் செய்துவிட்டு மக்கள் பணிபுரிய முழு நேர அரசியல்வாதியாக முன்வருவது பாராட்டத்தக்கது” என்று தொடர்ந்து அந்த வீடியோவில் பேசியுள்ளார். மேலும் நடிக்க வந்த போதே அடிக்க வந்த ஆயிரம் விமர்சனங்களை வெட்டி வீழ்த்தி தமிழகத்தில் வெற்றி கண்டவர் விஜய் என்றும் பாராட்டியுள்ளார். இது சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வைரலாகி வருகிறது.


