பிரபல இந்தி நடிகர் ஷ்ரேயாஸ் தல்படேவுக்கு படப்பிடிப்பின்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பிரபல பாலிவுட் நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே. அவருக்கு வயது 47. இவர் இந்தி மற்றும் மராத்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். 2005-ம் ஆண்டு வெளியான இக்பால் திரைப்படத்தில் சிறப்பு திறன் கொண்ட விளையாட்டு வீரராக நடித்து புகழ் பெற்றவர். அத்துடன் மராத்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் மூலமாக மக்களிடையே வரவேற்பை பெற்றார். இந்நிலையில், , மும்பையில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், படப்பிடிப்பு தளத்திலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து இந்த பகுதியில் உள்ள பெல்லூவ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் இதயத்தில் அடைப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, இரவு 10 மணிக்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும், நடிகர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் சில நாட்களுக்கு அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன் பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், அவர் சில நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்காமல் ஓய்வு எடுப்பார் என்று கூறப்படுகிறது.