ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள லப்பர் பந்து படக்குழுவினரை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் லப்பர் பந்து. இந்த படத்தினை தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து அட்டகத்தி தினேஷ், சுவாஸ்விகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பாலசரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்க தினேஷ் புருஷோத்தமன் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்த படம் நாளை (செப்டம்பர் 20) திரைக்கு வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. அதேசமயம் கேப்டன் விஜயகாந்தின் குறியீடுகள் இந்த படத்தில் பல இடங்களில் இடம் பெற்று இருக்கும். இதற்காக இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் பிரத்தியேக காட்சியை பார்த்த பலரும் படம் குறித்து பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனும் லப்பர் பந்து படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
Special thanks to @Siva_Kartikeyan for his detailed and heartfelt appreciation for #LubberPandhu. Lots of love to him from our entire team ❤️#LubberPandhuFromTomorrow
Produced by @lakku76 and
Co-produced by @venkatavmedia. @Prince_Pictures @iamharishkalyan #AttakathiDinesh… pic.twitter.com/rpjYxhW3F3— Prince Pictures (@Prince_Pictures) September 19, 2024
அந்த வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயன், “ஹரிஷ் கல்யாணுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தினேஷ், அவருடைய கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார். எல்லா கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பாடல்கள் அருமையாக வந்திருக்கிறது. ஹீரோ மற்றும் வில்லன் என இல்லாமல் இரண்டு ஹீரோக்களையுமே ரசிகர்கள் ரசிக்க வேண்டும் என இயக்குனர் அருமையாக கையாண்டுள்ளார். அதிலும் கேப்டனின் குறியீடுகள் மிகவும் அழகாக இருக்கிறது. ஓரிரு இடங்களில் மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலுமே கேப்டனுடைய குறியீடுகள் அவருக்கான மரியாதையை தந்துள்ளது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.