நடிகர் சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சூர்யாவின் காட்சிகள் சில நிமிடங்களை இடம் பெற்று இருந்தாலும் திரையரங்கையே அதிர வைத்தது. அதன் பின்னர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். 3D தொழில்நுட்பத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படமானது 2024 அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் பத்துக்கும் மேலான மொழிகளில் வெளியாக இருக்கிறது. அதை தொடர்ந்து சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 43வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். புறநானூறு என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்த இந்த படமானது இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட இருந்த நிலையில் ஒரு சில அரசியல் காரணங்களால் நடிகர் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகினார். அதே சமயம் இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் அந்தமான் பகுதியில் தொடங்கப்பட்டு தற்போது ஊட்டி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா படப்பிடிப்பு தளத்தில் நடனக் கலைஞர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.