எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவில் உச்சம் தொட்ட கலைஞர் நடிகர் விக்ரம். ஆரம்ப காலத்தில் டப்பிங் கலைஞராக இருந்து பின்னர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக தவிர்க்க முடியாத இடத்திற்கு சென்றவர். இவருக்கு முன்னோடியாக நடிகர் விஜயகாந்த் இதைப்போலவே எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமா துறையில் நுழைந்து பின்னர் தன் கடின உழைப்பால் மாபெரும் நடிகரானார். இன்று உடல் நலக்குறைவால் விஜயகாந்த் இவ்வுலகை விட்டுப் பிரிந்துள்ளார். தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது தமிழ் மக்களையும் தீரா சோகத்தில் ஆழ்த்திச் சென்று விட்டார் விஜயகாந்த். தீவிர சுவாசப் பிரச்சனையால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவருடைய உயிர் பிரிந்தது.அவரது உடல் சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பல பிரபலங்கள் நேரில் சென்று தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். கேப்டன்… கேப்டன்… என்று தொண்டர்களும் கதறி அழுகின்றனர். பாதுகாப்பு பணிகளுக்காக நூற்றுக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Saddened to hear the passing of one of the most loving and caring beings ever. We will miss you Captain!! #RIP
— Vikram (@chiyaan) December 28, 2023
இந்நிலையில் நடிகர் விக்ரம்,விஜயகாந்த் மறைவுக்காக வருத்தத்துடன் எக்ஸ் தளத்தில் தன்னுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளார். “மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு மனிதனின் இறப்பை கேட்டு மிகவும் மனம் வருந்துகிறேன். மிஸ் யூ கேப்டன்” என்று பதிவிட்டுள்ளார் விக்ரம்.