நடிகை க்ரித்தி ஷெட்டி, கார்த்தி குறித்து பேசி உள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான ‘தி வாரியர்’ என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் க்ரித்தி ஷெட்டி. அதாவது இந்த படத்தில் இடம்பெற்ற ‘புல்லட்’ பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதன் பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி வரும் க்ரித்தி ஷெட்டி தமிழிலும் வா வாத்தியார், எல்ஐகே, ஜீனி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்த மூன்று படங்களுமே அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. அதில் வருகின்ற டிசம்பர் மாதம் கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் வலுவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில் தற்போது பேட்ச் ஒர்க் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய க்ரித்தி ஷெட்டி, கார்த்தி குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “நான் கார்த்தி சாரின் மிகப்பெரிய ரசிகை. நான் அவருடைய பையா படத்தை 100 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதை ரசித்திருக்கிறேன். ஐதராபாத்தில் தி வாரியர் படப்பிடிப்பின் போது, பொன்னியின் செல்வன் படத்தின் செட் எங்களுடைய படப்பிடிப்பு பகுதிக்கு அருகில் தான் இருந்தது. அப்போது இயக்குனர் லிங்குசாமி சார், ‘நான் உங்களை கார்த்திக்கை சந்திக்க அழைத்து செல்கிறேன்’ என்று என்னிடம் சொன்னார்.
ஆனால் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததால் அவரை நேரில் சந்திக்க முடியவில்லை. ஆனாலும் நதியா மேடம் கார்த்தி சாருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். என்னையும் அவருடன் பேச வைத்தார். அப்போதுதான் நான் பையா படத்தை 100 முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன் என்று கார்த்தி சாரிடம் சொன்னேன்” என்று தெரிவித்துள்ளார்.


