நடிகை சுவாசிகா, சூர்யா 45 படம் குறித்து பேசி உள்ளார்.
நடிகை சுவாசிகா தமிழ் சினிமாவில் வைகை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து கோரிப்பாளையம் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். ஆனால் கடந்த ஆண்டில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து சுவாசிகாவிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்த வகையில் சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான மாமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இது தவிர சூர்யாவின் 45 வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். தற்காலிகமாக சூர்யா 45 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்க அவருடன் இணைந்து திரிஷா, நட்டி நடராஜ், யோகி பாபு, சுவாசிகா, ஷிவதா மற்றும் பலர் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. விரைவில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைய இருக்கிறது.
இந்நிலையில் நடிகை சுவாசிகா, “சூர்யா 45 படத்தில் என்னுடைய கேரக்டர் மிகவும் ஸ்பெஷலானது. நான் வித்தியாசமான தோற்றத்தில் வருவேன். ஆர் ஜே பாலாஜி சார் என்னிடம், இது நீங்கள் இதுவரை நடித்த எந்த கதாபாத்திரத்தையும் போல் இருக்காது என்று சொல்லி எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்தார்” என்று தெரிவித்துள்ளார்.