வாரிசு , துணிவு படங்களுக்கு ரசிகர்களுக்கு டிக்கெட் விநியோகம் செய்துவிட்டு படம் திரையிட முடியாததால் அயனாவரம் பகுதியில் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
500 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்த நிலையில் படத்தை வெளியிடாததால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தினர்.

அயனாவரம் கோபி கிருஷ்ணா திரையரங்கில் இன்று காலை படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது, விநியோகஸ்தர்கள் படம் கொடுக்கவில்லை, அதனால் படத்தை திரையிட முடியாது என நிர்வாகம் சார்பில் கூறியதாக தெரிகிறது.
இதனால், ஆத்திரம் அடைந்த அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தியேட்டரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, தகவல் அறிந்த அயனாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரசிகர்களை சமாதானம் செய்தனர்.
500 ரூபாய்க்கு பணத்தை கொடுத்து டிக்கெட் வாங்கியதாகவும், தற்போது படத்தை வெளியிடாமல் ஏமாற்றுவதாகவும் கூறி திரையரங்கு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
தியேட்டர் நிர்வாகத்திடம் கட்டண தொகையை திரும்பி வாங்கி செல்லும்படி போலீசார் தெரிவித்தனர்.
இதனை ஏற்று சில ரசிகர்கள் உடனடியாக பணத்தை வாங்கிக் கொண்டு சென்றனர்.
ஆனால், சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து தியேட்டர் நிர்வாகத்தினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட இழுபறிக்கு பின் போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தியேட்டர் நிர்வாகம் சார்பில் குறிப்பிட்ட பணத்தை செலுத்தி இரண்டு படங்களையும் வாங்க முடியாததால் குறிப்பிட்ட நேரத்திற்கு படம் வந்து சேரவில்லை.
இதனால், இந்த குழப்பம் ஏற்பட்டதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அயனாவரம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.