நடிகர் அஜித் தன்னுடைய அடுத்த படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
அஜித் கடைசியாக ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்த இந்த படம் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு தரமான விருந்து படைத்தது. எனவே இதைத் தொடர்ந்து நடிகர் அஜித், மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் அந்த படத்திற்காக மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருவதாகவும் படத்தில் மோகன்லால், சுவாசிகா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் ‘ஏகே 64’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அனிருத் இதன் இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டைட்டிலுடன் வருகின்ற நவம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் அஜித் சமீபத்தில் நடந்த பேட்டியில் இந்த படம் தொடர்பான அறிவிப்பு எப்போது வரும்? என்ற தகவலை பகிர்ந்துள்ளார். அவர், “என்னுடைய அடுத்த படத்தை சுமார் இரண்டு மாதங்களில் தொடங்க இருக்கிறேன். ஜனவரி மாதத்தில் அதற்கான அறிவிப்பை வெளியிட இருக்கிறோம். நான் ஒரே நேரத்தில் படப்பிடிப்பையும், ரேஸிங்கையும் செய்ய நேரிடலாம். இரண்டையும் ஒரே நேரத்தில் பேலன்ஸ் செய்ய முயற்சி செய்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதாவது ஏற்கனவே நடிகர் அஜித், கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வரும் நிலையில், கார் பந்தயம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தொடரும் என்று சொல்லப்பட்டது. தற்போது அஜித் கொடுத்திருக்கும் பேட்டியின் மூலம் ‘ஏகே 64’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது ஜனவரிக்கு பிறகுதான் தொடங்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


