‘புஷ்பா: தி ரூல்’ திரைப்படத்திற்காக சிறந்த அசல் திரைக்கதைக்கான தேசிய திரைப்பட விருதை வென்ற இயக்குநர் சுகுமாருக்கு நடிகர் அல்லு அர்ஜூன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


72-ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், ‘புஷ்பா: தி ரூல்’ படத்திற்காக சிறந்த அசல் திரைக்கதைக்கான தேசிய திரைப்பட விருதை பண்ட்ரெட்டி சுகுமார் பெற்றார்.
இதையடுத்து, இயக்குநர் சுகுமாருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்துள்ளார்.
அதில், தனது இயக்குநர் சுகுமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்த அல்லு அர்ஜுன், இந்த தருணத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்ததாகவும், சுகுமார் பெற்றுள்ள இந்த விருது தனது விருதைப் போலவே தனக்கு முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘புஷ்பா’ திரைப்படத்திற்காக தங்கள் இருவருக்கும் தேசிய விருதுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 69-ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்திற்காக அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றிருந்தார். இந்தப் பிரிவில் தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
2021-ஆம் ஆண்டு வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படத்துடன் தொடங்கிய புஷ்பா சீரிஸ், 2024-ஆம் ஆண்டு வெளியான ‘புஷ்பா: தி ரூல்’ திரைப்படத்தின் மூலம் தொடர்ந்தது. சுகுமார் இயக்கிய இந்தப் படங்களில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
