பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் விஜயகாந்தின் ரமணா, அஜித்தின் தீனா, விஜயின் துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது சல்மான்கான் நடிப்பில் உருவாகி வரும் சிக்கந்தர் திரைப்படத்தையும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் SK23 திரைப்படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அடுத்ததாக கஜினி 2 திரைப்படத்தை இயக்கப் போகிறாராம் ஏ.ஆர். முருகதாஸ்.
அதாவது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய சூப்பர் ஹிட் படங்களில் கஜினி திரைப்படமும் ஒன்று. தமிழில் இந்த படத்தில் சூர்யா, அசின், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து இந்த படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்திருந்தார் ஏ ஆர் முருகதாஸ். பாலிவுட் ரீமேக்கில் பாலிவுட் நடிகர் அமீர்கான் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ், இந்தியில் அமீர் கான் நடிப்பில் கஜினி 2 திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.