நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதே சமயம் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற்று இருந்தாலும் அவருக்கும் விஜய்க்குமான வசனங்கள் பல அர்த்தங்களை தருவதாக ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவரிடம் கோட் படத்தில் வரும் காட்சி குறித்தும் அதில் உள்ள வசனம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “முதலில் அந்த காட்சியில் நான் நடித்ததற்காக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதற்காக தளபதி விஜய்க்கும் வெங்கட் பிரபுவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.
“I’m happy that i got ‘Thuppakki’ scene from #TheGreatestOfAllTime. Thanks to VenkatPrabhu sir & #ThalapathyVijay♥️. There is always one Thalapathy, one Thala, One Ulaganayagan & one Superstar🫡💥✨”
– #Sivakarthikeyan at #Amaran event pic.twitter.com/TypxMuvaZY— AmuthaBharathi (@CinemaWithAB) September 30, 2024
அதைத்தொடர்ந்து அடுத்த தளபதி நீங்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அடுத்த தளபதி எல்லாம் இல்ல. ஒரே தளபதி தான். ஒரே தல தான். ஒரே சூப்பர் ஸ்டார் தான். ஒரே உலக நாயகன் தான். அடுத்த என்பதற்கு வாய்ப்பே கிடையாது” என்று கூறினார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் நிலையில் இப்படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.