அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அருண் விஜய் கடந்த அக்டோபர் மாதம் வெளியான ‘இட்லி கடை’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதற்கிடையில் இவர், ரெட்ட தல என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். ‘மான் கராத்தே’ படத்தின் இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் இந்த படத்தை இயக்க பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. சாம் .சி.எஸ் இப்படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருப்பது போல் தெரிகிறது. இவருடன் இணைந்து தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி, பாலாஜி முருகதாஸ், ஜான் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் பின்னணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதே சமயம் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இந்த படமானது இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தற்போது படக்குழு இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. இந்த படமானது வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


