அருண் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான படம் தான் மிஷன் சாப்டர் 1- அச்சம் என்பது இல்லையே.
பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் அருண் விஜய், நிஷா சஜயன், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக்சன் திரில்லர் கதை களத்தில் வெளியான இப்படத்தில் அருண் விஜய் ஆக்சன் காட்சிகளை மிரட்டி இருக்கிறார். மேலும் மற்ற நடிகர்களும் தங்களின் நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி மிஷன் சாப்டர் 1 படத்துடன் கேப்டன் மில்லர், அயலான் உள்ளிட்ட படங்கள் வெளியானது. எனவே தமிழ்நாட்டில் மிஷன் சாப்டர் 1 படத்திற்காக 80 திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதே சமயம் ஒரு நாளைக்கு ஒரு காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டது. தற்போது மிஷன் சாப்டர் 1 படத்திற்கு கிடைத்துள்ள ஏகோபித்த வரவேற்பினால் தமிழ்நாட்டில் இன்று முதல் கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்பட உள்ளது எனவும் நாள் ஒன்றுக்கு நான்கு காட்சிகள் திரையிடப்பட உள்ளது எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.