சிவகார்த்திகேயனின் 14 வது படமாக உருவாகியுள்ள அயலான் திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது. ஆர் ரவிக்குமார் இயக்கத்திலும் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் பேண்டஸி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், பானுப்பிரியா, யோகி பாபு, கருணாகரன், இஷா கோபிகர், பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் மற்ற படங்களைப் போலவே இப்படமும் குடும்பங்கள் கொண்டாடும் வண்ணம் அமைந்து தமிழ்நாட்டில் மட்டுமே 50 கோடிக்கு மேல் வசூலை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து அயலான் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயனும், படத்தின் இயக்குனர் ஆர். ரவிக்குமாரும் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
அதன்படி அயலான் படத்தின் முதல் பாகத்தில் VFX பணிகளை மேற்கொண்ட PhantomFX டீம் தான் அயலான் 2 படத்திற்கும் VFX பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும், அயலான் 2 படத்தின் VFX மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளுக்காக 50 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அயலான் படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற VFX காட்சிகளுக்காக PhantomFX டீம், பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.