spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇயக்குனர் இமயம்.....மண் பேசும் நாயகன்.... பாரதிராஜாவின் பிறந்த தின சிறப்பு பதிவு!

இயக்குனர் இமயம்…..மண் பேசும் நாயகன்…. பாரதிராஜாவின் பிறந்த தின சிறப்பு பதிவு!

-

- Advertisement -

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் 82 வது பிறந்த நாள் இன்று.

அரங்கத்திற்குள் நடத்தப்பட்டு வந்த படப்பிடிப்புகளை வெளிப்புற பகுதிகளுக்கு கொண்டு வந்த பெருமைக்குரியவர் பாரதிராஜா. தொடர்ச்சியாக உணர்வுகள் நிறைந்த பல்வேறு விதமான கிராமிய கதைகளை இயக்கி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். கல்லைக் கூட நடிக்க வைப்பார் பாரதிராஜா என்னும் வாசகமே இவருடைய இயக்குனர் திறமைக்கான அடையாளம். மேலும் பலமுறை தேசிய விருதுகள், மாநில விருதுகள், பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது என பல விருதுகள் இவரால் பெருமை அடைந்தன.இளம் பருவத்திலேயே இவருக்கு தமிழ் இலக்கியங்கள் மீது தீராக்காதல் உண்டு.  பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் திரை உலகின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. முதல் படமே இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. தனது அறிமுக படத்திலேயே கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து திரையுலகே பிரமிக்கும் அளவிற்கு சாதனை படைத்தார். இப்படத்திற்காக தமிழக அரசின் மாநில விருதை பெற்றார்.

we-r-hiring

தன் தாயாரின் மீது உள்ள அளவுக்கு அதிகமான அன்பில் தாயாரின் பெயரில் கருத்தம்மா எனும் திரைப்படத்தை இயக்கி அதற்காக தேசிய விருதையும் பெற்றார்.கருத்தம்மா படத்தின் மூலம் பெண் சிசுக்கொலை சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

கிழக்கே போகும் ரயில், வேதம் புதிது, முதல் மரியாதை உள்ளிட்ட படங்களின் மூலம் எளிய மனிதர்களின் அழகான காதலை வெளிப்படுத்தினார். சிகப்பு ரோஜாக்கள் ஒரு கைதியின் டைரி உள்ளிட்ட திரில்லர் படங்களின் மூலம் ரசிகர்களை திரையரங்கில் இருந்து வெளியில் செல்ல முடியாத அளவிற்கு தனது சிறப்பான காட்சிகளினால் கட்டிப் போட்டு வைப்பார்.அண்ணன் தங்கை பாசத்தையும் மிக எதார்த்தமாக திரையில் காட்டுவார். அந்த வகையில் கிழக்குச் சீமையிலே படத்தின் மூலம் அண்ணன் தங்கை பாசத்தை மிகை உணர்வுடன் கொடுத்தவர் பாரதிராஜா.

மேலும் அலைகள் ஓய்வதில்லை ,நிழல்கள், நிறம் மாறாத பூக்கள், புதுமைப்பெண், மண்வாசனை, நாடோடி தென்றல் உள்ளிட்ட படங்களின் மூலம் இயக்குனர் இமயமாகவே திகழ்ந்தவர்.

ஒவ்வொரு படங்களையும் இவர் பாசத்திற்குரிய உங்கள் பாரதிராஜா என்று தொடங்கி வைக்கும் விதம் ரசிகர்களை பெரிய அளவில் கவரும். தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 40 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். திரைத்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் இவரின் படங்கள் சாமானிய மக்களையும் கவர்ந்தது.

தமிழ் சினிமாவில் பல நடிகைகளை அறிமுகம் செய்துள்ளார். இவர் அறிமுகம் செய்தவர்களில் பெரும்பாலானோர் திரை உலகில் மிகப்பெரிய வெற்றி கண்டுள்ளனர்.மேலும் படங்கள் மட்டுமல்லாமல் தெக்கத்தி பொண்ணு என்ற தொலைக்காட்சி தொடரையும் இயக்கியிருந்தார்.

இசைஞானி இளையராஜா உடன் இணைந்து மறக்க முடியாத இனிமையான பாடல்களை தந்தவர். இவர் சிறந்த இயக்குனர் மட்டுமல்லாமல் சிறந்த நடிகர் என்பதையும் பல படங்களில் நிரூபித்து இருக்கிறார். ரசிகர்கள் அனைவரும் இவரை இயக்கத்தில் காண முடியவில்லை என்றாலும் திரை உலகில் எந்த வகையிலாவது காணும் பெருமையை  அடைகிறார்கள்.இவ்வாறு உயிர் உள்ளவரை கலைக்காகவே வாழும் மண் பேசும் நாயகன் பாரதிராஜாவிற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து பெருமை அடைவோம்.

MUST READ