தமிழ் சினிமாவில் 2024 ஆம் ஆண்டு பல பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகாமல் நிலுவையில் இருந்து வருகிறது. அதாவது நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக பல படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் விரைவில் முக்கியமான பிரம்மாண்ட படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கியுள்ள படம் தான் தங்கலான். இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதே சமயம் இந்த படம் 2024 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி விரைவில் ரிலீஸ் தேதியை பட குழுவினர் அறிவிப்பாளர்கள் என்று நம்பப்படுகிறது.
ராயன்
கடந்த 2017 இல் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா ஆகியோரின் நடிப்பில் ப. பாண்டி திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் மூலம்தான் நடிகர் தனுஷ் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு 5 வருடங்கள் கழித்து தனது ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி நடித்துள்ளார் தனுஷ். ராயன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், சரவணன், வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன், அபர்ணா பால முரளி, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மாஸான கேங்ஸ்டர் படமாக தயாராகியுள்ள இந்த படம் மே மாதத்தில் வெளியாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
இந்தியன் 2
கமல்ஹாசன், சங்கர் கூட்டணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு உருவாகியுள்ள படம் இந்தியன் 2. இந்த படத்தில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முழுவதும் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் மிகப்பிரமாண்டமாகவும் உருவாகியுள்ள இந்த படம் மே மாதத்தில் வெளியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அதேசமயம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.