கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று.
புரட்சிக் கலைஞர், கேப்டன், விருந்தோம்பல் நாயகன், கருப்பு எம்ஜிஆர், கருப்பு வைரம் என பல பெயர்களால் இன்று வரையிலும் ரசிகர்களால் போற்றப்பட்டு வருபவர் விஜயகாந்த். எம்ஜிஆரை போல் சினிமாவில் ஹீரோவாக வேண்டுமென்ற கனவுடன் சென்னைக்கு சென்று தனது கடின உழைப்பினாலும் விடாமுயற்சியாலும் தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கி திரைத்துறையில் கோலாச்சி செய்தவர் விஜயகாந்த். இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வாழ்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் யாரையும் ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு வழங்க வேண்டும் என்கிற மந்திரச் சொல் இன்று வரையிலும் பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் ஒவ்வொருவருக்கும் தோள் கொடுத்து அவர்கள் சினிமாவில் உயர்ந்த நிலையை அடைய உறுதுணையாக நின்றவர். இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் அரசியலிலும் களமிறங்கி ஒரு கை பார்த்தார். தோற்றத்திலும், குரலிலும் கம்பீரமிக்கவராக வாழ்ந்தவர். இத்தகைய பெருமைகளை உடைய விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருடைய மறைவு தமிழகத்தையே இருளில் மூழ்க செய்தது. அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையிலும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர் மக்கள் மனதில் மனிதநேயமிக்க மாமனிதனாக நிலைத்து நிற்பார். அன்னாரின் நினைவு நாளான இன்று அவரை எண்ணி போற்றி புகழ்வோம்.
மேலும் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று (டிசம்பர் 28) தேமுதிக கட்சியினர் சார்பில் குருபூஜையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு பல முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேமுதிக அலுவலகத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்தின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் இன்று காலையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து விஜயகாந்தின் நினைவிடத்தில் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.