சென்னை மாநகராட்சி தூய்மை பணிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு வீடு தோறும் சென்று குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர் யோகி பாபு. இவரின் நடிப்பில் வெளிவந்த காக்கா முட்டை, மான் கராத்தே,மெர்சல், கோலமாவு கோகிலா, மண்டேலா, கூர்கா உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும், துணை நடிகராகவும், நகைசுவை பாத்திரத்திலும் பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். ஒரே நேரத்தில் அஜித், விஜய் படங்களிலும் நடித்துள்ளார். நகைச்சுவை கதாபாத்திரங்கள் தவிர, சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நாயகனாகவும் நடித்துவருகிறார்.

தற்போது நடிகர் யோகி பாபு சென்னை மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்படும் விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்து வருகிறார். சென்னை மாநகராட்சியில் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த குறும்படம் தயாரிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்படும் இந்த படத்திற்காக வீடு வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் தூய்மை பணியாளர் வேடத்தில் யோகி பாபு நடித்து உள்ளார். விரைவில் இந்த குறும்படத்தை வெளியிட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.