கூலி படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாகிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, அமீர்கான் ஆகியோர் நடித்திருந்தனர். கிரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் சாதாரண பழிவாங்கும் கதையாக இருந்தாலும் செம மாஸாக கொடுத்திருந்தார் லோகேஷ். அதேசமயம் வழக்கம்போல் சூப்பர் ஸ்டார் ஆட்டம், பாட்டம், ஸ்டைல் என கலக்கி இருந்தார். அடுத்தது நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சௌபின் சாகிர் ஆகியோரின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்படுகிறது. இவ்வாறு இந்த படத்தில் சில பிளஸ் பாய்ண்டுகள் இருந்தாலும் திரைக்கதையும், கதாபாத்திரங்களும் வலுவாக இல்லாததால் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் படத்தை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட ரூ. 30 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. மற்ற மாநிலங்களில் ரூ. 60 கோடிக்கு அதிகமாகவும், வெளிநாடுகளில் ரூ. 70 கோடிக்கு அதிகமாகவும் வசூல் செய்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் தற்போது தொடர் விடுமுறை இருப்பதால் இப்படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


