கூலி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 
ரஜினி – லோகேஷ் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நேற்று ( ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் தான் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், உபேந்திரா, அமீர்கான் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருக்கிறார். வழக்கம் போல இந்த படத்தில் நடிகர் ரஜினி மாஸ் காட்டி இருக்கிறார். நாகார்ஜுனா ஸ்டைலிஷான வில்லனாக கலக்கியிருந்தார். சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் ஆகியோரும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சாதாரண பழிவாங்கும் திரைக்கதையில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் உலகம் முழுவதும் ரூ.170 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
எனவே இனிவரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதாவது கூலி படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றி இருப்பதால் 2025 செப்டம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் இப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.


