அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி படம் மிகச் சிறந்த ஹாரர் படமாக அமைந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது. முதல் பாகத்தைப் போலவே இப்பாகமும் ரசிகர்களை கவர்ந்ததா என்பதை விமர்சனமாக பார்ப்போம். முதல் பாகம் முடியும் இடத்தில் இருந்தே இரண்டாம் பாகத்தின் கதையை தொடங்கி இருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. முதல் பாகத்தின் கிளைமாக்ஸ்-ல் ஹீரோ அருள்நிதி இறந்து விடுவது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அவரின் அண்ணனாக இன்னொரு அருள்நிதியும் இருக்கிறார். டிமான்ட்டி காலனி 1-ல் நடக்கும் சம்பவங்களின் போது அதற்கு இணையான காலகட்டத்தில் ப்ரியா பவானி சங்கருக்கு ஏற்படும் பிரச்சனைகளை கதைக்களத்தின் முக்கிய புள்ளியாக கையாண்டுள்ளனர். சில முக்கிய காரணங்களால் பிரியா பவானி ஷங்கரும் அருள்நிதியும் மீண்டும் டிமான்ட்டி காலனிக்குச் செல்ல நேர்கிறது. அதன் பின்பு நடக்கும் திகில் சம்பவங்கள் தான் படத்தின் மீதிக்கதை. பார்ட் 1 -இன் சிறப்பம்சமே நான்கு நண்பர்களையும் ஓஜா போர்டையும் மையமாக வைத்து சிம்பிளான கதையை செம ஹாரர் திரில்லர் படமாக கொடுத்திருந்தது தான். அதே எதிர்பார்ப்பு இப்படத்திலும் இருந்தது. ஆனால் அது முதல் பாதியில் மட்டுமே ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இப்படத்தில் ப்ரியா பவானி ஷங்கரின் கேரக்டருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அதிக நேரம் ஸ்கிரீனில் வருகிறார். காட்சிக்கு காட்சி திரையில் உள்ள சஸ்பென்ஸை பார்வையாளர்களின் ஹார்ட் பீட்டில் ஒலிக்கச் செய்கிறார் இசையமைப்பாளர் சாம் C.S. படத்தின் மிகப்பெரிய பலமாக ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு அமைந்துள்ளது. தொடக்கத்தில் VFX காட்சிகள் துல்லியமாக அமையாவிட்டாலும் போகப் போக அமர்க்களப் படுத்தியுள்ளனர் தொழில்நுட்பக் குழுவினர். குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியில் வரும் சைனீஸ் ரெஸ்டாரன்ட் காட்சிகள் மிகப் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் இரண்டாம் பாதியின் திரைக்கதை சற்று தொய்வாக இருப்பதால் ஒரு சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்துவதையும் உணர முடிகிறது. பார்ட் 1 அளவிற்கு இல்லை என்றாலும் டிமான்ட்டி காலனி 2 படமானது திரையரங்களில் நிச்சயம் ஒருமுறை பார்த்து ரசிக்கக்கூடிய படமாக அமைந்துள்ளது.