90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் விஜய், அஜித், விக்ரம், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் சின்னத்திரையிலும் கால் பதித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதில் ‘கோலங்கள்’ சீரியல் மிகவும் முக்கியமான ஒன்று. இவர் தற்போது குணசத்திர வேடங்களில் சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சித்தார்த், சரத்குமார் உடன் இவர் இணைந்து நடித்திருந்த ‘3BHK’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தேவயானியின் கணவரும் பிரபல இயக்குனருமான ராஜகுமாரன் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது இயக்குனர் ராஜகுமாரன், தேவயானியை வைத்து ‘நீ வருவாய் என’, ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே வெற்றி படமாக அமைந்தது. இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் அந்த நேரத்தில் தேவயானி- ராஜகுமாரன் ஆகிய இருவருக்கும் காதல் மலர பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகள் இனியா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சரிகமப சீசன் 5’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பெயர் பெற்று வருகிறார். இந்நிலையில் தேவயானியின் கணவர் ராஜகுமாரன், சின்னத்திரை நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழாவில் சோப்பு கடை போட்டிருந்தது இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது. ராஜகுமாரன் – தேவயானி இருவரும் இமையா எனும் பெயரில் அழகு சாதன பொருட்களை தயாரிப்பதாகவும், ஒரு சில இடங்களில் இதுபோன்று கடை போடுவதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் இது தங்களின் சைட் பிசினஸ் என்றும் சோப் மட்டுமல்லாமல் ஹேர் ஆயில், தேன் போன்றவைகளும் விற்கப்படுவதாகவும், இந்த பொருட்கள் எல்லாம் தங்களின் தோட்டத்தில் விளைகின்ற பொருட்களை வைத்து தயாரிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார் ராஜகுமாரன். இருப்பினும் இதை பார்த்த பலரும் தேவயானி குடும்பத்தில் கடன் தொல்லையா? குடும்ப கஷ்டமா? என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலர் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.