பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஹீரோவாக அறிமுகமாகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
துள்ளல் இசையின் நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர். கடந்த 1999 இல் தேவி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், தமிழிலும் ஏகப்பட்ட வெற்றி படங்களுக்கு இசையமைத்து வெற்றி கொடி நாட்டினார். அது மட்டும் இல்லாமல் பல பாடல்களையும் பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அந்த வகையில் மன்மதன், சிங்கம், குட்டி, வீரம், புலி, கங்குவா, புஷ்பா 1, புஷ்பா 2 என பல முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றியுள்ளார். இருப்பினும் சமீபகாலமாக அவருக்கு சில சறுக்குகள் ஏற்பட்டு வருகின்றன. ஆனாலும் தேவி ஸ்ரீ பிரசாத் என்றாலே எனர்ஜி தான் நினைவுக்கு வரும். இந்நிலையில் இவர் ஹீரோவாக மாற உள்ளார் என புதிய தகவல் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது. அதாவது கடந்த சில வருடங்களுக்கு முன்னதாகவே இது போன்ற பேச்சுகள் அடிபட்ட நிலையில் அதன் பிறகு எந்த தகவலும் வெளிவரவில்லை. தற்போது இந்த தகவல் மீண்டும் உலா வர தொடங்கிய நிலையில், இந்த படத்தினை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளதாகவும் ‘பாலகம்’, படத்தின் இயக்குனர் வேணு எல்டாண்டி இந்த படத்தை இயக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ‘எல்லம்மா’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்கள் ஹீரோவாகவும், ஹீரோவாக அறிமுகமானவர்கள் இயக்குனராகவும், பாடகர்களாகவும், மாறி வெற்றி பெற்று வரும் நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத்தும் ஹீரோவாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.