நடிகர் தனுஷ் ரோபோ சங்கரின் மகளுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
சின்னத்திரையில் மிமிக்ரி, நடனம், நகைச்சுவை என தனது திறமைகளை வெளிக்காட்டி ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருப்பவர் ரோபோ சங்கர். இவர் வெள்ளித்திரையிலும் கால் பதித்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார். சமீபத்தில் சென்னையில் நடந்த புதிய படத்தின் படப்பிடிப்பின்போது நீர்ச்சத்துக் குறைபாடு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக ரோபோ சங்கர் மயங்கி விழுந்துள்ளார். அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவருடைய மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ரோபோ சங்கரின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நேற்று (செப்டம்பர் 18) இரவு 9:00 மணி அளவில் உயிரிழந்த ரோபோ சங்கரின் இறுதிச் சடங்குகள் இன்று (செப்டம்பர் 19) மதியம் நடைபெறும் என தகவல் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான தனுஷ் , ரோபோ சங்கரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அப்போது தேம்பித் தேம்பி அழுத ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்துள்ளார் தனுஷ்.ரோபோ சங்கர், தனுஷுடன் இணைந்து மாரி , மாரி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் ரோபோ சங்கருக்கு மிகப்பெரிய பெயரையும், புகழையும் பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.